சனி, பிப்ரவரி 18, 2012

எய்ட்ஸ்

சீனாவில், எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இதுவரை அந்நாட்டில் எய்ட்ஸ் நோயால் 68 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.சீனாவில், எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் ஏழு லட்சத்து 40 ஆயிரம் பேர். இவர்களில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் அந்நோயின் இறுதிக் கட்டத்தில்இருப்பவர்கள்.சீன கம்யூனிஸ்ட் அரசு, அந்நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கண்காணிப்புகள் இருந்த போதிலும், எய்ட்சால்பாதிக்கப்பட்டோர் என்பது தெரிந்தால் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தால் பலர் தங்கள் உடல்நிலையை பற்றித்தெளிவாக வெளியில் சொல்வதில்லை.
மேலும், கடந்தாண்டு, எச்.ஐ.வி.,யால் புதிதாகப் பாதிக்கப்பட்ட 44 ஆயிரம் பேரில், 13 சதவீதம் பேர் ஆண் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத் தக்கது.இவ்வளவுக்கும், ஓரினச் சேர்க்கைக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் மட்டும் ஏழாயிரத்து 700 பேர் எய்ட்சுக்குப் பலியாகியுள்ளனர். கடந்தாண்டோடு இதுவரை சீனாவில் மொத்தம் 68 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் 1990களில் ஆரம்பிக்கப்பட்ட, "ரத்த விற்பனை' திட்டத்தால் தான் இந்நோய் அதிகளவில் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவின் துணை இயக்குனர் ஹாவோ யாங் கூறியுள்ளார்.கடந்த 1990 முதல், சீனாவில் ரத்த விற்பனைத் திட்டம் துவக்கப்பட்டது. அதன்படி, ஒருவர் தனது ரத்தத்தை உரிய ஏஜன்சியிடம் விற்று அதற்கேற்ப பணம் பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதலாக, ஒருவரின் ரத்தத்தில் உள்ள "பிளாஸ்மா' வை மட்டும் எடுத்து விட்டு, மீண்டும் அதே ரத்தத்தைக் கொடுத்தவர் உடம்பிலேயே செலுத்தி விடுவர்.இம்முறையில் பாதுகாப்பற்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டதால் தான் அதிகளவில் எய்ட்ஸ் பரவியது என்கிறார் யாங். மேலும், நாடு முழுவதும் போலி ஏஜன்சிகள் அதிகரித்து விட்டதால் ரத்த பரிமாற்றத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்கிறார் அவர்.
குறிப்பாக, இந்த ரத்த விற்பனைத் திட்டத்தால், ஹெனான், ஷான்ஷி, ஆன்ஹூயி மற்றும் ஹூபேய் ஆகிய மாகாணங்களின் கிராமப் புறப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், சீனாவில் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களின் முழு எண்ணிக்கையும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.thanks to ekarai